செய்திகள்

பெண்ணாடம் அருகே மேம்பால தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்தில் டாக்டர் பலி

Published On 2016-08-30 16:00 IST   |   Update On 2016-08-30 16:00:00 IST
பெண்ணாடம் அருகே மேம்பால தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் டாக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண்ணாடம்:

திருச்சியை அடுத்த ராஜராஜசோழபுரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 27). டாக்டர்.

இவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் தங்கி மேற்படிப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு நவீன் தனது காரில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார்.

நள்ளிரவு 1.30 மணி அளவில் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது.

இதனால் நவீன் மிகவும் சிரமப்பட்டு காரை ஓட்டினார். திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாட்டிற்குள் சிக்கி பலியான டாக்டர் நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News