செய்திகள்

முதலைகள் நடமாட்டம்: பவானிசாகர் அணை பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு

Published On 2016-08-29 15:49 IST   |   Update On 2016-08-29 15:49:00 IST
பவானிசாகர் அணை பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் தெங்குமஹாடா மாயாறும் மேட்டுப்பாளையம் பவானி ஆறும் கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது.

அணையின் நீர்த்தேக்கப் பகுதியான சித்தன்குட்டை வனத்தில் இருந்து ஏராளமான யானைகள் பவானி ஆற்றுப்படுகையில் தண்ணீர் குடிக்க வந்து செல்லும்.

யானைகள் குட்டியுடன் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் போது சமீபகாலமாக முதலைகளால் தாக்கப்படுகின்றன. சித்தன்குட்டை ஆற்றுப் படுகையில் முதலைகள் அதிகளவில் நடமாடுவதால் முதலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சித்தன்குட்டை நீர்ப்பிடிப்பு பகுதியில் மீனவர்கள் மாலை நேரங்களில் பரிசலில் சென்று மீன்வலை விரித்துவிட்டு அதிகாலை நேரங்களில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் திருட்டு மீன் பிடிக்கும் கும்பலை கண்காணிக்கும் மீன்வர் குழுவினர் நீர்தேக்கப் பகுதியில் சமையல் செய்து சாப்பிட்டு இரவுநேர காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது முதலைகள் அதிகளவில் நடமாடுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். முதலைகள் நடமாட்டத்தால் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன் பிடிக்குமாறு பொதுப் பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் முதலைகள் நடமாட்டத்தையொட்டி பவானிசாகர் அணை பகுதியில் வனத்துறையினர் இரவு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். திருட்டுத்தனமாக மீன் பிடிக்கும் கும்பலும் முதலையிடம் சிக்கிவிட கூடாது எனவும் கண்காணித்து வருகிறார்கள்.

Similar News