செய்திகள்

பெங்களூரு குண்டு வெடிப்பில் சத்தியை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் கைது

Published On 2016-08-16 12:11 IST   |   Update On 2016-08-16 12:15:00 IST
பெங்களூரு குண்டு வெடிப்பில் சத்தியை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய வெங்கடாச்சலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் குட்டி என்ற முகமது அலிகான் (வயது 40).

முகமது அலி கான் சத்தியமங்கத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் சத்தியில் உள்ள ஒரு உணவு விடுதியில் நேற்று மதியம் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 5 பேர் வந்தனர். திடீரென தன்னை நோக்கி 5 பேர் வந்ததை கண்டு திடுக்கிட்ட முகமது அலிகானை அந்த 5 பேரும் பிடித்து தள்ளி கொண்டு தாங்கள் வந்த ஜீப்பில் ஏற்றினர்.

இது குறித்து அவரது சகோதரர் உஸ்மான் அலி அடையாளம் தெரியாத 5 பேர் என் சகோதரரை கடத்தி செல்வதாக சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் உடனடியாக இது குறித்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் முகமது அலிகானை கைது செய்தது பெங்களூர் போலீசார் என தெரிய வந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இவர் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

பெங்களூரு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஸ் தலைமையில் வந்த கர்நாடகா போலீசார் இவரை கைது செய்ததும் தெரிய வந்தது.

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சத்தியை சேர்ந்த குட்டி என்ற முகமது அலிகானை பெங்களூர் போலீசா திடீரென கைது செய்ததை தமிழக முஸ்லீம் கழக முன்னேற்றத்தினர் கண்டனம் தெரிவித்துள்னர்.

மேலும் இதை கண்டித்து சத்தியமங்கலத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் செய்தனர். செல்போன் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகமது அலிகான் கைதுக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

‘‘பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு 3 ஆண்டாக நடந்து வருகிறது. இந்த நிலையில் முகமது அலிகானை குற்றவாளியாக சித்தரித்து கைது செய்துள்ளனர். அவருக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவரை விடுவிக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Similar News