செய்திகள்

பள்ளிக்கூட வேன் மோதி 1½ வயது குழந்தை பலி: டிரைவர் கைது

Published On 2016-08-13 05:31 IST   |   Update On 2016-08-13 05:31:00 IST
பள்ளிக்கூட வேன் மோதி 1½ வயது குழந்தை தாயின் கண் எதிரே பரிதாபமாக இறந்தது. விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் மணிகண்டன். வேன் டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்களுடைய மகள்கள் சிவானி (வயது 5), சாய் தாரணி (1½). இதில் சிவானி கோபியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள். தினமும் பள்ளிக்கு வேன் மூலம் சிவானி சென்று வந்தாள்.

நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வீட்டுக்கு முன் பள்ளிக்கூட வேன் வந்தது. ரஞ்சனி, சிவானியை அழைத்து சென்று பள்ளிக்கூட வேனில் ஏற்றி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். இதற்கிடையே ரஞ்சனிக்கு பின்னால் ஓடி வந்த குழந்தை சாய்தாரணி பள்ளிக்கூட வேன் முன்னால் நின்று கொண்டிருந்தது. இதை ரஞ்சனி கவனிக்கவில்லை.

இந்த நிலையில் வேனில் சிவானி ஏறியதும், டிரைவர் வேனை நகர்த்தினார். அப்போது முன்னால் நின்ற சாய் தாரணி மீது வேன் மோதியது. இதில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அலறியபடி குழந்தை உயிருக்கு போராடியது. திடீரென தன் மகள் சாய் தாரணியின் அலறல் சத்தம் கேட்கிறதே என நினைத்த ரஞ்சனி சட்டென்று திரும்பி பார்த்தார்.

அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை தன் மடியில் தூக்கி வைத்து கதறி அழுதார். பின்னர் அங்கிருந்தவர்கள் குழந்தை சாய்தாரணியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பள்ளிக்கூட வேன் டிரைவர் குமாரை (46) கைது செய்தனர்.

Similar News