செய்திகள்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தெய்வகுமார்

காதல் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு மகளிர் கோர்ட் தீர்ப்பு

Published On 2016-07-28 16:01 IST   |   Update On 2016-07-28 16:01:00 IST
காதல் மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு உயிரோடு எரித்துக்கொன்ற கணவருக்கு இன்று ஈரோடு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளிபாசியூரை சேர்ந்தவர் தெய்வக்குமார் (வயது 35). இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ஈஸ்வரி (32) கடந்த 8 ஆண்டுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மனைவி நடத்தையில் தெய்வகுமார் சந்தேகப்பட்டார். கடந்த 24-10-15 அன்று ஈஸ்வரி ஒரு துக்க வீட்டுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது தெய்வகுமார் ஆத்திரத்தில் சந்தேகப்பட்டு திட்டினார். இதற்கு ஈஸ்வரியோ, ‘ஏன் இப்படி சந்தேகப்படுகிறீர்கள்? என்று கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தெய்வகுமார் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்தார்.

இதில் உடல் முழுவதும் கருகி துடித்த ஈஸ்வரி கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் மறுநாள் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகுமாரை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன் தெய்வகுமாருக்கு வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு வக்கீலாக சுமதி ஆஜர் ஆனார்.

Similar News