செய்திகள்

பண்ருட்டியில் தங்கையின் உடல் தகனத்தின் போது தீயில் குதித்த அண்ணன்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2016-06-18 16:31 IST   |   Update On 2016-06-18 16:31:00 IST
பண்ருட்டியில் தங்கை உயிர் இழந்ததால் தீயில் குதித்த அண்ணனின் பாசச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி:

விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). இவரது தங்கை குமாரி(24). தங்கை மீது குமார் மிகவும் பாசமாக இருந்தார்.

தங்கையை பண்ருட்டி அருகே உள்ள நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். குமாரிக்கு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குமார் தனது தங்கை குமாரி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

இந்த நிலையில் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக குமாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக குமாருக்கு தகவல் வந்தது. உடனே குமார் கண்ணீர் விட்டு கதறினார். தனது குடும்பத்தினருடன் நல்லூர் பாளையத்துக்கு வந்தார். தங்கையின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார்.

பின்னர் குமாரியின் இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்தது. உடலை வீட்டில் இருந்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். குமார் அழுதபடியே நடந்து சென்றார். சுடுகாட்டில் குமாரியின் உடலை தகனம் செய்தனர்.

அப்போது துக்கம் தாங்காமல் குமார் கதறியபடியே ஓடிவந்தார். அவரை அங்குள்ளவர்கள் தடுத்தனர். இருப்பினும் அதையும் மீறி குமாரியின் உடல் தகனம் செய்யப்பட்ட தீயில் குதித்தார். அவர் உடலில் தீ பற்றியது.

அங்கிருந்தவர்கள் அவரை வெளியே இழுத்து அவர் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும் குமார் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயம் அடைந்த குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச் சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீயில் குதித்த குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. அருக்கு அஞ்சலாட்சி என்ற மனைவியும் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர்.

தங்கை உயிர் இழந்ததால் தீயில் குதித்த அண்ணனின் பாசச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News