செய்திகள்

குழந்தைபெற முடியாதவன் என்று திட்டியதால் தீர்த்துக்கட்டினேன்: பெண் கொலையில் கைதான லாரி டிரைவர் வாக்குமூலம்

Published On 2016-06-15 13:10 IST   |   Update On 2016-06-15 13:11:00 IST
குழந்தைபெற முடியாதவன் என்று திட்டியதால் தீர்த்துக்கட்டினேன் என்று பெண் கொலையில் கைதான மினிலாரி டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பரங்கிப்பேட்டை:

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.முட்லூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அமுதா(வயது 46). கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அமுதா கணவனை பிரிந்து அந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். அமுதாவிற்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை அமுதா வட்டிக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி அமுதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதற்கிடையே அங்குள்ள வெள்ளாற்றங்கரையில் அமுதாவை மர்ம மனிதர்களை கொன்று புதைத்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கிள்ளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் வீரமணி, அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அமுதாவை கொன்று வெள்ளாற்றங்கரையில் புதைத்ததை ஒப்புக் கொண்டனர். அதிகாரிகள் முன்னிலையில் அமுதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அமுதாவை கொன்றது ஏன்? என்று மினிலாரி டிரைவர் வீரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் அதன் விவரம் வருமாறு:-

நான் தேன்நிலவு என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை.

எனது வீட்டின் அருகே அமுதா தனியாக வசித்து வந்தார். அவருக்கும் எனக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இதனால் எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எனக்கும், அமுதாவிற்கும் தகராறு ஏற்படும் போது ‘குழந்தை பெற முடியாதவன்’ என்று என்னை மனம் நோகும்படி திட்டுவார்.

இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவமானம் தாங்காமல் துடித்தேன். எனவே அமுதாவை தீர்த்து கட்டவேண்டும் என முடிவு செய்தேன்.

இதுதொடர்பாக எனது நண்பர் பிரேம்குமாரிடம் கூறினேன். அவரும் அமுதாவை கொல்ல ஒப்புக்கொண்டார்.

கடந்த 29-ந் தேதி இரவு அமுதா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், பிரேம் குமாரும் அங்கு சென்றோம். தூங்கிக்கொண்டிருந்த அமுதாவை தலையில் கோடரியால் ஓங்கி அடித்தேன். அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் அமுதா துடிதுடித்து இறந்தார்.

பின்னர் பிணத்தை வெள்ளாங்கரையில் புதைக்க நினைத்தேன். என்னுடைய மினிலாரியை அங்கு ஓட்டி வந்தேன். பின்னர் நானும், பிரேம் குமாரும் சேர்ந்து அமுதாவை தூக்கி சென்று மினிலாரியில் வைத்தோம்.

அதன்பின்னர் மினி லாரியை வெள்ளாற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றோம். அங்கு அமுதாவின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்றோம்.

மேற்கண்டவாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வீரமணி, பிரேம்குமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஆயிஷாபேகம் உத்தரவிட்டார்.

பின்னர் 2 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News