செய்திகள்

கடலூர் கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - அதிகாரிகள் ஆய்வு

Published On 2016-05-26 12:14 IST   |   Update On 2016-05-26 12:14:00 IST
கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் மீன்கள், இறால்கள் செத்து மிதந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் வங்கக் கடலில் கலக்கும் ஆறுகளில் ஒன்று கெடிலமாகும். இந்த ஆறு கடலில் கலப்பதற்கு சுமார் 5 கிலோ மீட்டருக்கு முன்பாக கம்மியம்பேட்டை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரால் கம்மியம்பேட்டை, திருவந்திபுரம், பில்லாலி தொட்டி மற்றும் கடலூர் நகராட்சியின் ஏராளமான பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கெடிலம் ஆற்றில் மீன்கள், இறால்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மீன்களை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.

கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலை கழிவுநீர் ஆற்றில் பாய்வதால் மீன்கள் செத்து மிதந்ததாக பொதுநல அமைப்புகள் குற்றச்சாட்டுகளை எழுப்பின. மேலும் பல ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதும் கெடிலம் ஆற்றில் மீண்டும் மீன்கள் செத்து மிதப்பதால் தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் தண்ணீரில் கலந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது போன்ற சம்பவம் தொடர்ந்தால் கடலூர் நகரம் முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படுவதோடு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் உயிர் பலி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News