செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 774 பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2016-05-24 17:14 IST   |   Update On 2016-05-24 17:14:00 IST
கடலூர் மாவட்டத்தில் 774 பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு செய்யப்பட உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கடலூர் மாவட்டத்தில் உள்ள 774 பள்ளி வாகனங்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆண்டு தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆய்வு நாளை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், சிதம்பரம் பகுதியில் சி.முட்லூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மைதானத்திலும், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இதில் கடலூரில் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வினை பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார்.

ஆய்வின்போது வாகனத்திற்கு ஓட்டுனர் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மஞ்சள் நிறம் பூசி இருக்க வேண்டும், ஜன்னல்களில் கிரில்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவி இருக்க வேண்டும், வாகனத்தில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்களின் சின்னம் மற்றும் பின்புறத்திலும், முன்புறத்திலும் பள்ளி வாகனம் என்று எழுதப்பட் டிருக்க வேண்டும். வாகனத்தின் தொழில் நுட்பத்திறன், காப்பு சான்று ,தகுதிச்சான்று அனுமதி சீட்டு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வாகனத்தில் ஒரு வழி கதவு தான் இருக்க வேண்டும். இந்த பள்ளி வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News