செய்திகள்

புதுக்கோட்டை-திருச்சியில் சூறாவளியுடன் மழை: இடி விழுந்ததில் வீடு சேதம்

Published On 2016-05-09 15:51 IST   |   Update On 2016-05-09 15:51:00 IST
புதுக்கோட்டை–திருச்சியில் நேற்று இரவு சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் இடி விழுந்ததில் வீடு சேதமானது.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கீரனூர் உள்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது.

மழையின் காரணமாக திருவரங்குளம் பூவரசகுடி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி ரவி என்பவர் வீட்டில் திடீரென இடி விழுந்ததில் வீட்டின் ஓடுகள் பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ரவியின் மனைவி அஞ்சலை, மகனுக்கு காயம் ஏற்பட்டது.

மேலும் அருகில் உள்ள அழகர் என்பவரின் வீட்டில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி.க்கள் அனைத்தும் சேதமடைந்தன.

திருச்சி மாநகரில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் மாநகரின் பல இடங்களில் மின்னலுடன் பலத்த காற்று வீச தொடங்கியது. இரவு 9 மணிக்கு மேல் மாநகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. அரியமங்கலம், காட்டூர், பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், மத்திய பேருந்து நிலையம், பொன்மலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Similar News