செய்திகள்

பெண்கள் வாக்களித்தாலே தி.மு.க. ஆட்சியை பிடித்து விடும்: தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேச்சு

Published On 2016-05-09 09:00 IST   |   Update On 2016-05-09 11:52:00 IST
மதுவிலக்கு அமல் என்று கூறியிருப்பது பெண்கள் மனதில் ஆழமாக பதிந்து வேரூன்றி உள்ளது. எனவே பெண்கள் மட்டுமே வாக்களித்தால் கூட தி.மு.க. கட்டாயம் ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் கூறினார்.
காளையார்கோவில்:

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் மேப்பல் சத்தியநாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டங்களில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று கூறுகிறார்கள். அது தவறு. அந்த வருமானம் மற்ற கடைகளில் மக்கள் வாங்குகின்ற பொருட்களால் வருகின்ற வரியிலிருந்து அரசுக்கு வந்துவிடும். எனவே அரசுக்கு இழப்பு ஏற்படாது. மாறாக மிடாஸ் தொழிற்சாலை உரிமையாளருக்கு இழப்பு ஏற்படும்.

தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம். மதுவிலக்கு அமல் என்று கூறியிருப்பது பெண்கள் மனதில் ஆழமாக பதிந்து வேரூன்றி உள்ளது. தமிழகத்தில் உள்ள பெண்கள் மட்டுமே வாக்களித்தால் கூட தி.மு.க. கட்டாயம் ஆட்சி அமைக்கும். ஆண்களும் சேர்ந்து வாக்களித்தால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 3-ல், 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News