செய்திகள்

மதுரையில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி–மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Published On 2016-05-07 10:37 IST   |   Update On 2016-05-07 14:14:00 IST
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி - மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.
மதுரை:

தி.மு.க. - காங் கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச இன்று மாலை ராகுல் காந்தி மதுரை வருகிறார். அவரது பாதுகாப்புக்காக 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.

மதுரை அருகே ஊமச்சிக்குளம் நத்தம் ரோட்டில் மேனேந்தலில் இன்று மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டதத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 3.30 மணிக்கு மதுரைக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார்.

அங்கு தி.மு.க. - காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களையும், முதுகுளத்தூர், சிவகாசி, வேடசந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களையும் ராகுல் காந்தி ஆதரித்து பேசுகிறார். இந்த பொதுக் கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

ராகுல் காந்தி மதுரை வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல ஊமச்சிக்குளம், நத்தம் சாலையில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 1000 போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு பிரிவு போலீசாரும் வருகை தந்துள்ளதால், ஊமச்சிக்குளம் - நத்தம் சாலை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதால் மதியத்திற்கு மேல் அந்த வழியாக பெரிய வாகனங்கள் வேறு வழியாக மாற்றி விடப்பட்டது.

Similar News