செய்திகள்

இலவச அறிவிப்புகளை மக்கள் நம்ப மாட்டார்கள்: கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2016-05-07 09:25 IST   |   Update On 2016-05-07 14:12:00 IST
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி சொல்வதைத் தான் செய்வார். செய்வதைத் தான் சொல்வார். கடந்த தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றியவர் அவர். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மீது ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

தலைவர் கருணாநிதி மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்று சொல்லி கட்டண சுமையை குறைத்திருக்கிறார். பாரதீய ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களும் வந்தது இல்லை. பாரதீய ஜனதா ஜூலை போராட்டம் நடத்தியது. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என கூறியது. ஆனால் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பொறியியல், வேளாண்மை உயர் கல்வி பயிலுகிற அனைத்து மாணவர்களுக்கும் ஜாதி மத வேறு பாடின்றி முதல் தலைமுறையினருக்கு கல்விச்செலவை அரசே ஏற்கும் என கூறி உள்ளது.

பூரண மதுவிலக்கை தி.மு.க.வால் மட்டுமே கொண்டு வர முடியும். ஆட்சி பொறுப்பேற்றதும் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி போடுவார்.  தமிழகத்தில் தொழில்வளம், வேலை வாய்ப்பை பெருக்க நீங்கள் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News