சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஓடு பாதைகளும் செயல்பாட்டுக்கு வந்தன
- ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
- விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் செயல்பாட்டில் உள்ளன. அதில் முதல் ஓடுபாதை 3.66 கிலோமீட்டர் நீளமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் நீளமும் உடையது.
இதில் பிரதான ஓடுபாதையான முதல் பாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு வருகின்றன. 2-வது ஓடுபாதையில் ஏ.டி.ஆர். எனப்படும் 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள், மற்றும் தனியாரின், தனி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2 ஓடு பாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு வசதியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடுபாதையில் இருந்து, மற்றொரு ஓடுபாதைக்கு செல்ல, "டாக்சி வே"என்ற இணைப்புப் பாதைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த டாக்சி வே "பி" என்ற "பிராவோ"முதல் ஓடு பாதைக்கு நேராக செல்லாமல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில், வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த டாக்சிவே 'பி' யை, நேர்படுத்தும் பணிகள் நடந்தன.
தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால் தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், இரண்டு ஓடுபாதைகளும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதையிலும் விமான சேவைகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த பாதையில் 615 விமானங்கள் இயக்கப்பட்டன.
ஆனால் இந்த ஜூன் மாதத்தில் 952 விமானங்களாக அதிகரித்துள்ளன. வரும் மாதங்களில் 2-வது ஓடுபாதையில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படும் எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு மணி நேரத்தில், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் சென்னை விமான நிலையத்தில், இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இருப்பதோடு, விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவதில் தாமதங்கள் ஏற்படாமல், விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.