தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத்தை காண சென்னையில் இருந்து 1 லட்சம் பக்தர்கள் அரசு பஸ்சில் பயணம்

Published On 2022-12-06 09:39 GMT   |   Update On 2022-12-06 09:39 GMT
  • சென்னையில் இருந்து நேற்று 400 சிறப்பு பஸ்களும், இன்று 1000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
  • நாளை பவுர்ணமி சிறப்பு தினமாக இருப்பதால் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

சென்னை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சேலம், திருப்பத்தூர், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து நேற்று 400 சிறப்பு பஸ்களும், இன்று 1000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இன்று மாலையில் மகா தீபம் ஏற்றப்படுவதால் அதை காண செல்லும் பக்தர்கள் கூட்டம் பஸ் நிலையங்களில் அதிகரித்தது.

சுமார் ஒரு லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலம் பயணம் செய்துள்ளனர். நாளை பவுர்ணமி சிறப்பு தினமாக இருப்பதால் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கார்த்திகை தீபம், பவுர்ணமியையொட்டி 3000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,430 பஸ்கள் இன்று செல்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக தேவையான அளவு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

தீபம், பவுர்ணமி முடிந்து திரும்பி வரவும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை வரை சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்த வசதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News