உலக கோப்பை வெற்றியால் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு அதிகரிப்பு
- ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது.
- ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நவி மும்பையில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன்பு 2 தடவை (2005, 2017) இறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. இதனால் நாடு முழுவதும் இந்திய மகளிர் அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
1983-ம் ஆண்டு கபில் தேவ் உலக கோப்பையை வென்றது போல தற்போது ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் உலக கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மகளிர் உலக கோப்பையை வென்ற 4-வது நாடு இந்தியாவாகும். ஆஸ்திரேலியா (4 தடவை), இங்கிலாந்து (4), நியூசிலாந்து (1) வரிசையில் இந்தியாவும் இணைந்தது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரூ.39.77 கோடி பரிசு தொகையை வழங்கியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.91 கோடி கிடைத்துள்ளது.
உலக கோப்பையை வென்றதால் இந்திய மகளிர் அணியினர் ஒரே இரவில் புகழின் உச்சத்துக்கு சென்றனர். வீராங்கனைக்கான விளம்பர மதிப்பு 35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது. தென் ஆப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதால் 35 சதவீதம் வரை விளம்பர மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும். ஒரு விளம்பரத்துக்கு மந்தனா ரூ.2 கோடியும், ஹர்மன்பிரீத் ரூ.1.2 கோடியும், ஜெமிமா ரோட்ரிகஸ் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், ஷபாலி வர்மா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் பெறுகிறார்கள்.
மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி முதல் ரூ.35 கோடியாகும். ஹர்மன் பிரீத் சொத்து மதிப்பு ரூ.25 கோடியாகும்.
இந்த உலக கோப்பையில் மந்தனா 434 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மாவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் (22 விக்கெட், 215 ரன்) தேர்வு பெற்றனர்.
வீரர்களை பொறுத்தவரை விராட் கோலி ஒரு விளம்பரத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி பெறுகிறார். தெண்டுல்கர் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரையும், டோனி ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரையும், ரோகித் சர்மா ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரையும் பெறுகிறார்கள்.