விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து- பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் கத்தார் சென்றன

Published On 2022-11-17 10:57 IST   |   Update On 2022-11-17 10:57:00 IST
  • அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.
  • உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது.

தோகா:

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வளத்தால் அங்கு பணம் கொழிக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அந்நாட்டு அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறது.

உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் வந்த வண்ணமாய் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.

இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தோகா சென்றடைந்தன. அந்நாட்டு வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News