உலக கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மோதிய 2-வது ஆட்டமும் டிரா
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
2-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
நேற்றைய 2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அவர் 48-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
டி.குகேஷ்
உலக சாம்பியன் டி.குகேஷ் கஜகஸ்தான் வீரர் நோதர்பெக்குடன் மோதிய முதல் ஆட்டம் 'டிரா' ஆனது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் குகேஷ் 1.5-0.5 புள்ளிகளுடன் 3-வது சுற்றுக்கு நுழைந்தார். இதேபோல தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆஸ்திரேலிய வீரர் தெமுருடன் மோதிய 2-வது ஆட்டமும் 'டிரா' ஆனது. இதனால் இன்றைய டை பிரேக்கர் ஆட்டத்தில் ஆடுவார்.