null
US Open 2025 ஜோகோவிச், அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.
முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.