ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்- சின்னர் பட்டத்தை தக்கவைப்பாரா?
- கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
- நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ள வருமான ஜானிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா) போன்ற முன்னணி வீரர்களும், நம்பர் ஒன் இடத்தில் உள்ள சபலென்கா (பெலா ரஸ்) இகாஸ்வியாடெக் (போலந்து) கோகோ கவுப், நடப்பு சாம்பியன் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) போன்ற முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அல்காரஸ் 2024-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
சின்னர் 2024-ல் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபனையும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்.
அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். அதே நேரத்தில் நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.
24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரான ஜோகோவிச் கடந்த 2 ஆண்டாக எந்த கிராண்ட் சிலாம் பட்டமும் பெற்றதில்லை. அவர் தற்போது தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளார்.