விளையாட்டு

உலகக் கோப்பை செஸ்: இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2025-07-25 12:17 IST   |   Update On 2025-07-25 12:17:00 IST
  • உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி மோதுகின்றனர்.
  • இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது.

பதுமி:

'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜி இடையிலான அரைஇறுதியின் முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நேற்று நடந்தது.

டைபிரேக்கரிலும் முதல் இரு ஆட்டங்கள் 'டிரா' ஆனது. அடுத்த இரு ஆட்டங்களில் இருவரும் தலா ஒன்றில் வெற்றி பெற்றனர். இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இதன் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனெரு ஹம்பி 70-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதன் 2-வது ஆட்டத்தில் கருப்புநிற காய்களுடன் ஆடிய ஹம்பி எதிராளியை மிரட்டினார். 33-வது நகர்த்தலில் ராஜா, ராணி இரண்டுக்கும் குதிரை மூலம் 'செக்' வைத்தார். அத்துடன் தோல்வியை லீ டிங்ஜி ஒப்புக் கொண்டார்.

மொத்தம் 8 ஆட்டங்கள் நீடித்த இந்த அரைஇறுதியில் கோனெரு ஹம்பி 5-3 என்ற புள்ளி கணக்கில் டிங்ஜியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார். 38 வயதான ஹம்பி உலக செஸ் போட்டியில் இறுதிப்போட்டியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மேலும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

இறுதி ஆட்டத்தில் கோனெரு ஹம்பி, சக நாட்டவரான திவ்யா தேஷ்முக்கை சந்திக்கிறார். இதன் மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது. இறுதிசுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.

Tags:    

Similar News