விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு: 111 பதக்கங்கள் குவித்து இந்தியா சாதனை

Published On 2023-10-28 07:57 GMT   |   Update On 2023-10-28 07:57 GMT
  • 2018-ல் 72 பதக்கங்கள் வென்று 9-வது இடத்தை பிடித்திருந்தது
  • தற்போது 39 பதக்கங்கள் அதிகமாக பெற்றுள்ளது

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு 107 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலத்துடன் 111 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சீனா 521 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், ஈரான் 131 பதக்கங்களுடன் (44 தங்கம்) 2-வது இடத்தையும், ஜப்பான் 150 பதக்கங்களுடன் (42 தங்கம்) 3-வது இடத்தையும், கொரியா 103 பதக்கங்களுடன் (30 தங்கம்) 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் பாரா ஆசிய விளையாட்டு கடந்த 2010-ல் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் 15-வது இடத்தை பிடித்தது.

2014-ல் 15-வது இடத்தையும், 2018-ல் 9-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News