விளையாட்டு

ஒலிம்பிக்கிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடத்தில் இருப்போம்- பாகிஸ்தான் வீரர்

Published On 2023-08-29 06:14 GMT   |   Update On 2023-08-29 06:14 GMT
  • உலக தடகளத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது.
  • இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம்.

உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். உலக தடகளத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது தான். அவரது தந்தை முகமது அஷ்ரப் கொத்தனார் ஆவார்.

ஒரே நாளில் பாகிஸ்தானின் ஹீரோவாக உயர்ந்துள்ள 26 வயதான அர்ஷத் நதீம் கூறுகையில், 'நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதில் மகிழ்ச்சி. இப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது. இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், நாட்டுக்கும் உணர்வுபூர்வமான தருணம். நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன்' என்றார்.

போட்டி முடிந்ததும் நீரஜ் சோப்ராவும், 3-வது இடத்தை பெற்ற வால்டெஜியும் அவர்களது தேசிய கொடியுடன் போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர். அப்போது அருகில் நின்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை சோப்ரா புகைப்படம் எடுக்க அழைத்தார். அவரிடம் பாகிஸ்தான் தேசிய கொடி இல்லாததால் அவரும் நீரஜ் சோப்ராவுடன் இணைந்து இந்திய தேசிய கொடியின் பின்னணியில் நிற்க வேண்டியதானது.

இந்த காட்சி சமூக வலைதளத்தில வைரலாகியுள்ளது. பாராட்டுகளும் குவிகிறது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 'நதீமை இந்த அழகிய புகைப்படத்தில் இடம் பெற சோப்ரா அழைத்தார். அண்டை நாட்டவர்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதற்கு பதிலாக அன்பை பரப்ப வேண்டும்' என்றும், இன்னொரு ரசிகர் 'என்ன ஒரு அற்புதமான படம். இரு நாட்டை சேர்ந்த இரு கதாநாயகர்கள்' என்றும் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News