விளையாட்டு

இந்திய பயணத்தால் மெஸ்ஸிக்கு கிடைத்த வருமானம் இத்தனை கோடியா?

Published On 2025-12-22 11:28 IST   |   Update On 2025-12-22 11:28:00 IST
  • இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி வருகை தந்தார்.
  • நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா:

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வருகை தந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டார். இதில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் பெரும் குளறுபடி ஏற்பட்டு விட்டது.

ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி ஸ்டேடியத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், 10-15 நிமிடங்களிலேயே மெஸ்ஸி அங்கிருந்து கிளம்பியதால் அவரை சரியாக பார்க்க முடியாத ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல மணிநேரம் போராடி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நடந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'மைானத்துக்குள் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டு அவரை தொடுவதும், கட்டியணைப்பதும் அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்ஸியின் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்தும் அதையும் மீறி பலர் அவ்வாறு நடந்து கொண்டனர். மேலும் மைதானத்தில் 150 பேருக்கு மட்டுமே 'பாஸ்' வழங்கப்பட்ட நிலையில், செல்வாக்கு மிக்க நபரின் தலையீட்டால் அதை மூன்று மடங்கு உயர்த்த வேண்டியதாகி விட்டது. அதன் பிறகே பாதுகாப்பும் சீர்குலைந்து போனது. இதனால் தான் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மெஸ்ஸி வெளியேறினார்.

இந்திய பயணத்துக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டது. மேலும் ரூ.11 கோடி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டது. இவற்றில் கணிசமான தொகை ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் கட்டணம் மூலம் வசூலிக்கப்பட்டது' என தத்தா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தத்தாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.20 கோடி முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News