பாகிஸ்தான் கேப்டனுக்கு தடை விதித்து விட்டு ராஜினாமா செய்த ஹாக்கி சம்மேளன தலைவர்
- ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம்.
- பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது.
கராச்சி:
புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு 4 ஆட் டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது.
தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். 'ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம். தங்கும் ஓட்டலுக்கு பாகிஸ்தான் சம்மேளனம் முன்கூட்டியே பணம் செலுத்தாததால் ஒரு மணி நேரம் ரோட்டில் பரிதவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தங்கவைக்கவைக்கப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது.
பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். பிறகு எப்படி போட்டியில் கவனம் செலுத்த முடியும்' என்று கூறிய ஷகீல் பட், பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஓராண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கிக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் தனது பதவியையும் துறந்துள்ளார். ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்புக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள தாரிக் புக்தி, 'ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தது பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் தான். அங்கு நடந்த நிகழ்வுக ளுக்கு அவர்களே பொறுப்பு. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.