கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2025-05-23 22:34 IST   |   Update On 2025-05-23 22:34:00 IST
  • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
  • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

லண்டன்:

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் சதமடித்தனர். பென் டக்கெட் 140 ரன்னிலும், ஜாக் கிராலி 124 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ஒல்லி போப் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஒல்லி போப் 171 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 565 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

ஜிம்பாப்வே அணியின் முசாராபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 139 ரன்னில் அவுட்டானார். கேப்டன் கிரெய்க் எர்வின் 42 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை விட 300 ரன்கள் பின்தங்கியதால் பாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இங்கிலாந்து சார்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News