கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெர்- தென்ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்.

null

மகளிர் உலகக்கோப்பை முதல் அரையிறுதி : தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2025-10-29 09:03 IST   |   Update On 2025-10-29 10:28:00 IST
  • தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
  • இவ்விரு அணிகளும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லையுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக மழையால் பாதியில் ரத்து) 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

அந்த அணியில் பேட்டிங்கில் ஹீதர் நைட், அமே ஜோன்ஸ், டாமி பீமோன்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், லின்சே சுமித், சார்லி டீனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆல்-ரவுண்டராக கேப்டன் நாட் சிவெர் அசத்துகிறார். கடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் பாதியில் வெளியேறினார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். நடப்பு தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவர் ஆடமுடியாமல் போனால் இங்கிலாந்து அணிக்கு இழப்பாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாத்தில் இமாலய வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும்.

தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பணிந்தது. அதன் பிறகு நியூசிலாந்து, இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது. கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. 10 புள்ளிகள் எடுத்த தென்ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது.

தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். சுழலில் தகிடுதத்தம் போடும் அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்னிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 97 ரன்னிலும் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால் முக்கியமான இந்த ஆட்டத்துக்கு முன்னதாக சுழலுக்கு எதிரான பலவீனத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வார்ட் (301 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் தஸ்மின் பிரிட்ஸ், மரிஜானே காப், சுனே லூஸ் ஆகியோர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் மிலாபா (11 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். அவருக்கு ஆல்-ரவுண்டர்கள் மரிஜானே காப், நடினே டி கிளெர்க் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்க முனைப்பு காட்டும் தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் சுழல் ஜாலத்தை தாக்குப்பிடிப்பதை பொறுத்தே ஏற்றம் காண முடியும்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் வோல்வார்ட் கூறுகையில், 'எங்களது வீராங்கனைகள் அனைவரும் திறமைமிக்கவர்கள். நாளைய (இன்று) ஆட்டத்தில் பதற்றமின்றி நிதானமாக செயல்பட்டால் நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைக்கும். எங்களை விட இங்கிலாந்துக்கு அணியினர் நிறைய நெருக்கடியில் இருப்பார்கள்' என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 36-ல் இங்கிலாந்தும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

போட்டி நடக்கும் கவுகாத்தியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: அமே ஜோன்ஸ், டாமி பீமோன்ட், ஹீதர் நைட், டேனி வியாட், நாட் சிவெர் (கேப்டன்), சோபியா டங்லி, அலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன் அல்லது சாரா கிளென், லின்சே சுமித், லாரன் பெல்.

தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னெரி டெர்க்சன், மரிஜானே காப், சினாலோ ஜப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயாபோங்கா காகா, மிலாபா.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News