கிரிக்கெட் (Cricket)

டி20 உலக கோப்பை 2026: மீண்டும் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்- வெளியான தகவல்

Published On 2025-11-22 11:08 IST   |   Update On 2025-11-22 11:08:00 IST
  • அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன.
  • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

துபாய்:

10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.

இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் அணிகள் விவரம் வெளியாகியுள்ளது. தரவரிசை அடிப்படையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்று உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

இரு அணிகளும் ஆசிய கோப்பை போட்டியில் சமீபத்தில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது, பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

தற்போது இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பையில் மீண்டும் மோத உள்ளன. அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன.

நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் இடம் பெற்றுள்ள பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக அமெரிக்கா, நமீபியா அணிகளுடன் இந்தியா விளையாடும். இறுதி 'லீக்' ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கும்.

இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் உள்ளன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்புக்கு மாற்றப்படும். மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அரைஇறுதி நடைபெறலாம். போட்டி குறித்த அட்டவணை விவரம் வருகிற 25-ந்தேதி மும்பையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News