ருத்ர தாண்டவமாடிய பிலிப் சால்ட்: 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 304 ரன்கள் குவிப்பு
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 304 ரன்களைக் குவித்தது.
மான்செஸ்டர்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது. முதல் டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பிலிப் சால்ட் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 100 ரன்களைத் தொட்டது.
முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் சதமடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி 95 ரன்கள் சேர்த்த நிலையில் பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்துள்ளது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார்.