கிரிக்கெட் (Cricket)

ஷ்ரேயாஸ் ஐயரை 2026-ல் கழற்றி விடத் தான் இப்படி ஒரு ஸ்கெட்ச்.. கம்பீரை சாடிய தினேஷ் கார்த்திக்

Published On 2025-09-09 09:23 IST   |   Update On 2025-09-09 09:23:00 IST
  • ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார்.
  • டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விடுவதற்காகவே இப்போதே கவுதம் கம்பீர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கவில்லை என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார் என்பதை ஒருபுறம் வையுங்கள். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து இந்தியா 20 டி20 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகள் பெற்றுள்ளது. எனவே ஒரு பயிற்சியாளராக தமக்கு வெற்றிகளைக் கொடுத்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்காக அவர் சில வீரர்களை கழற்றி விட்டு கடினமான முடிவுகளை எடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆசியக் கோப்பை அறிவித்த பின் அவர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு சரியாகப்படவில்லை.

அது உலகக் கோப்பை உட்பட வருங்கால தொடர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்பதற்கான சமிக்கையாகும். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆசியக் கோப்பைக்கு பின் இந்தியா சில இருதரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் 5 ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.

டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த உலகக் கோப்பையில் அவர் இருப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர்.

என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

Tags:    

Similar News