இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரம்: ஆசிய கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்?
- போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது
- இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். ஓய்வறை வாசலில் பாகிஸ்தான் வீரர்கள் காத்துக் கொண்டிருந்த போது இந்திய அணி அறைக் கதவு மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போட்டிக்கு முன்பே மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ. உடன் ஆலோசித்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்து விட்டதாக கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறினார். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டு உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவா் மோசின் நக்வி 'எக்ஸ்'தள பதிவில் 'கிரிக்கெட்டின் மூலமாக இருக்கும் எம்.சி.சி.யின் விதிகளை யும், ஐ.சி.சி.யின் நடத்தை விதிகளையும் போட்டி நடுவா் (ஆண்டி பை கிராப்ட்) மீறியது தொடா் பாக ஐ.சி.சி.யிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நடுவரை ஆசிய கோப்பை போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.
ஐ.சி.சி. நிராகரிப்பு
பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடுவர் பைகிராப்டை நீக்கும் மனநிலையில் இல்லை என்று கூறிப்படுகிறது. மோஷின் நக்வியின் கோரிக்கை மீது ஐ.சி.சி. நட வடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து ஐ.சி.சி. தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
போட்டி நடுவரை நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகப் போவதாகவும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க இருப்பதால் அந்த அணி போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வி ஆசிய கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். அவர் ஜெய்ஷா தலைவராக இருக்கும் ஐ.சி. சி.யிடம் தான் முறையிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.