கிரிக்கெட் (Cricket)

பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது.. உலக கோப்பை வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா உருக்கம்

Published On 2025-11-03 03:44 IST   |   Update On 2025-11-03 03:44:00 IST
  • எங்கள் அனைவருக்கும் எத்தனையோ மன வருத்தங்கள் ஏற்பட்டன.
  • எங்கள் விளையாட்டை மேம்படுத்த கடுமையாக உழைத்தோம்.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, "இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வெற்றி இன்னும் என்னுள் முழுமையாக உள்வாங்க முடியவில்லை.

நான் கிரிக்கெட் மைதானத்தில் உணர்ச்சிவசப்பட்டதில்லை. ஆனால், இது நிஜமாகவே ஒரு மிகவும் நம்ப முடியாத தருணம். நம் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம்.

ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் நாங்கள் சென்றபோதும், எங்கள் அனைவருக்கும் எத்தனையோ மன வருத்தங்கள் ஏற்பட்டன. பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது.

கடந்த கால ஏமாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்புணர்ச்சியாக மாறியது. அந்த அனுபவங்களை நாங்கள் உறுதியாக்கிக் கொண்டு, எங்கள் விளையாட்டை மேம்படுத்த கடுமையாக உழைத்தோம்.

இந்த ஒரு இரவிற்காக நாங்கள் 45 நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறோம். கடந்த உலகக்கோப்பை எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த தோல்விக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரே குறிக்கோளோடு இருந்தோம்.

உடல் தகுதியை அதிகரித்து, பலமான வீராங்கனைகளாக மாறுவது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீராங்கனைகளாக இருப்பது என்று முடிவு செய்து உழைத்தோம்.

அணியின் வெற்றி என்பதை தாண்டி மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம். கடந்த ஒன்றரை மாதங்களாக நாங்கள் பெற்ற ஆதரவைக் காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

Similar News