பிளே ஆப் சுற்று வாய்ப்பில் திண்டுக்கல் அணி நீடிக்குமா? நெல்லை ராயல் கிங்சுடன் இன்று மோதல்
- பிளே ஆப் சுற்றின் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.
- பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
நெல்லை:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. நேற்று டன் 23 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. திருப்பூர் தமிழனஸ் 8 புள்ளிகளுடனும், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 6 புள்ளிகளுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், கோவை கிங்ஸ் 2 புள்ளிகளுடனும் உள்ளன.
முன்னாள் சாம்பியனான கோவை 5 போட்டியில் தோற்று வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றின் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.
இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 24- வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.அந்த அணி நெல்லையை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.
அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.