ஆஷஸ் தொடரில் ஒயிட்வாஷ்.. இங்கிலாந்துக்கு மெக்ராத் எச்சரிக்கை
- ஆஷஸ் தொடரில் அவர்களால் ஒரு டெஸ்ட்டை வெல்ல முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
- ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 21-ந் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். எங்கள் அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும்போது, அது இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதில்லை என்ற புள்ளிவிவரமும் உள்ளது. இதனால் ஆஷஸ் தொடரில் அவர்களால் ஒரு டெஸ்ட்டை வெல்ல முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
என மெக்ராத் கூறினார்.
இங்கிலாந்து அணி கடைசியாக 2010-2011-ம் ஆண்டில் ஆஷஸ் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.