கிரிக்கெட் (Cricket)

முகமது கைப் கருத்துக்கு பதிலடி கொடுத்த பும்ரா

Published On 2025-09-26 17:43 IST   |   Update On 2025-09-26 17:43:00 IST
  • ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.
  • காயத்தை தவிர்ப்பதற்காகவே பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முகமது கைப் கூறினார்.

ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் 28-ந் தேதி மோதவுள்ளது.

முன்னதாக இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஓமனுக்கு எதிரான போட்டியில் மட்டும் ஓய்வெடுத்தார். மற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார்.

இருப்பினும் கேப்டன் சூர்யகுமார் அவரை வித்தியாசமாக பயன்படுத்தினார். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முந்தைய கேப்டன்கள் அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்தி எதிரணியை சாய்ப்பதற்காக பவர்பிளேவில் குறைவாக பயன்படுத்துவார்கள்.

அதே சமயம் முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா தான் வீசுவார். ஆனால் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கும் சூர்யகுமார் பவர் பிளேவில் பும்ராவை 3 ஓவர்கள் வீச வைத்து விடுகிறார்.

இந்நிலையில் காயத்தை தவிர்ப்பதற்காகவே ஜஸ்ப்ரித் பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முன்னாள் வீரர் முகமது கைப் குற்றம் சாட்டினார். இது போன்ற நகர்வு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார்.

இது குறித்து கைப் கூறியதாவது:-

ஜஸ்ப்ரித் பும்ரா பொதுவாக ரோகித் தலைமையில் 1, 13, 17, 19-வது ஓவர்களை போடுவார். ஆனால் சூர்யகுமார் தலைமையில் ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.

இப்போதெல்லாம் காயத்தை தவிர்ப்பதற்காக பும்ரா தன்னுடைய உடல் தயாராக இருக்கும் போதே பவுலிங் செய்ய விரும்புகிறார். ஆனால் எஞ்சிய 14 ஓவர்களில் பும்ரா 1 ஓவர் மட்டுமே வீசுவார் என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். இது உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு வலியைக் கொடுக்கலாம்.

என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜஸ்ப்ரித் பும்ரா "இதற்கு முன்பும் தவறானது. மீண்டும் தவறாக இருக்கிறது" என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது அன்றும் இன்றும் சூழ்நிலைக்கு தகுந்தார் போலவும் கேப்டனின் விருப்பத்திற்கு இணங்க அணிக்காக பந்து வீசுவதாக பும்ரா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News