ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: ஒருவேளை அப்படி இருக்குமோ.. அவுட் கொடுக்காத நடுவர்.. ரிவ்யூ கூட கேட்காமல் வெளியேறிய இஷான் கிஷன்

Published On 2025-04-23 20:46 IST   |   Update On 2025-04-23 20:46:00 IST
  • தீபக் சாஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் படவில்லை.
  • இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஐதராபாத்:

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் போல்ட் வீசிய 2-வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த இஷான் கிஷன் களமிறங்கினார்.

இந்நிலையில் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்து இஷான் கிஷனுக்கு பின் பக்கமாக சென்றது. அதனை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் எளிதாக பிடித்தார். அப்போது நடுவர் ஒய்டு கொடுப்பதற்காக கைகளை உயர்த்திய போது, திடீரென இஷான் கிஷன் நடக்க தொடங்கினார்.

இதனால் உடனடியாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பவுலர் தீபக் சாஹர் ஆகியோர் அவுட் கோரிக்கை வைத்தனர். அதன்பின் நடுவர் யோசித்து கொண்டே அவரது கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.

சந்தேகத்தின் அடிப்படையில் இஷான் டிஆர்எஸ் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் அதை கேட்காமல் உடனடியாக பெவிலியன் சென்றார்.

இதனையடுத்து இஷான் கிஷனுக்கு வீசப்பட்ட பந்தை ஸ்னிக்கோமீட்டரில் சோதனை செய்தனர். அப்போது தீபக் சஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் மற்றும் அவரது உடம்பில் கூட படவில்லை என்பது தெரிய வந்தது. இதனை ஓய்வு அறையில் பார்த்து கொண்டிருந்த இஷான் கிஷன் தலையில் அடித்துக் கொண்டார்.

பேட்டில் படாமல் இஷான் கிஷன் எதற்காக நடந்து சென்றார், எதற்காக டிஆர்எஸ் அப்பீல் கூட செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் இஷான் கிஷனின் விஸ்வாசம் எப்போதும் அம்பானிக்கு தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News