ஐ.பி.எல்.(IPL)

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் - பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் 

உள்ளூரில் ஜொலிக்குமா பெங்களூரு அணி? - ராஜஸ்தானுடன் இன்று மோதல்

Published On 2025-04-24 08:12 IST   |   Update On 2025-04-24 08:12:00 IST
  • பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
  • ரியான் பராக் மீண்டும் அணியை வழிநடத்துகிறார்.

பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி வெளியூரில் நடந்த 5 ஆட்டங்களிலும் (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) வெற்றியையும், சொந்த மைதானத்தில் நடந்த 3 ஆட்டங்களிலும் (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியையும் சந்தித்துள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடிய 3 ஆட்டங்களில் முறையே 169, 163, 95 ரன்களே (மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம்) எடுத்துள்ளது. வெளியூரில் ஒரு ஓவரில் 9-10 ரன் சேர்க்கும் அந்த அணி சொந்த மைதானத்தில் 7-8 ரன்னை தாண்ட முடியாமல் பரிதவிக்கிறது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (322 ரன்) நல்ல நிலையில் இருக்கிறார். கேப்டன் ரஜத் படிதார் (221), பில் சால்ட் (213), தேவ்தத் படிக்கல் (180) இன்னும் அதிக ரன் எடுக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி இந்த சீசனில் வெகுவாக தடுமாறுகிறது. 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), 6 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும், முந்தைய 4 ஆட்டங்களிலும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.

எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால் ராஜஸ்தானுக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார். இதனால் ரியான் பராக் மீண்டும் அணியை வழிநடத்துகிறார். ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (307 ரன்), ரியான் பராக் (212), துருவ் ஜூரெல், ஹெட்மயர், நிதிஷ் ராணா நம்பிக்கை அளிக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிரடிகாட்டி 34 ரன்கள் எடுத்து கவனத்தை ஈர்த்தார். அந்த அணியின் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கமில்லை. ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள்.

உள்ளூரில் முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராஜஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்க தீவிரமாக முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் பெங்களூருவும், 14 ஆட்டத்தில் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில் வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா அல்லது ஆகாஷ் மத்வால்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News