கிரிக்கெட் (Cricket)
null

295 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெர்த் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

Published On 2024-11-25 13:22 IST   |   Update On 2024-11-25 13:41:00 IST
  • பும்ரா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்தினார்.
  • 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், விராட் கோலி சதம் விளாசி அணியின் ஸ்கோருக்கு உதவியாக இருந்தனர்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 104 ரன்னில் சுருண்டது.

46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு 534 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.

534 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது களம் இறங்கியது. பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. உஸ்மான் கவாஜ் உடன் ஸ்மித் ஆட்டத்தை தொடங்கினார். கவாஜா 4 ரன்னிலும், ஸ்மித் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்மித் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 79 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது.

அதன்பின் டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடினார். அவரை பும்ரா 89 ரன்னில் வீழ்த்தினார்.

அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் மிட்செல் மார்ஷை 47 ரன்னில் நிதிஷ் ரெட்டி வீழ்த்தினார்.

தேனீர் இடைவேளைக்கு முன் வாஷிங்டன் சுந்தர் ஸ்டார்க்கை 12 ரன்னில் வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 227 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் வாஷிங்டன் சுந்தர் பந்தில் நாதன் லயன் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 227 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி விக்கெட்டுக்கு அலேக்ஸ் கேரியுடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் க்ளீன் போல்டாக ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி பெர்த் மைதானத்தில் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் பெர்த்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

Similar News