கிரிக்கெட் (Cricket)

சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தா?- வாசிம் ஜாபர் சொல்வது என்ன..!

Published On 2025-09-08 17:29 IST   |   Update On 2025-09-08 17:29:00 IST
  • சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.
  • தொடர்ந்து ரன்கள் குவிக்கவில்லை என்றால், அது கவலை அளிக்கும் விதமாக இருக்கும்.

இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். வருங்காலத்தில் கேப்டன் ஆவதற்கான தகுதியை மேம்படுத்திக் கொள்ள பிசிசிஐ இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தற்போது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். கடந்த சில சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அதிக அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இது தொடர்ந்தால் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாசிம் ஜாபர் கூறியதாவது:-

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவின், ரன் குவிப்பு தேய்ந்த வண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. அவர் ரன் அடிக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில சர்வதேச போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் லைக்-சைடு ஸ்கொயர் (square) பகுதியில் அதிக ரன்கள் அடிக்க எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய ஷாட் செலக்ஷன், அவருடைய தகுதிக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தி, ஐபிஎல் தொடரில் மாறுபட்ட வீரராக இருந்ததை பார்த்திருப்போம்.

அவர் ஆஃப்-சைடு ஸ்கோர் அடிக்க தொடங்கினார். அனைத்து திசைக்கும் பந்தை விரட்டும்போது, பந்து வீச்சாளரால் மிகப்பெரிய அளவில் ஏதும் செய்ய முடியாது. அவர் அபாயகரமான பேட்ஸ்மேன். எந்த பந்துவீச்சாளர் என்ற வித்தியாசம் இல்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். அது ஆசிய கோப்பை தொடரிலும் தொட வேண்டும் என நம்புகிறேன்.

ஒவ்வொரு தொடருக்கும், துணைக் கேப்டன்களை இந்திய அணி அறிவித்துள்ளது. இதனுடைய அர்த்தம், கேப்டன் பதவி ஆபத்தில் இருக்கிறது என்பதல்ல. பும்ரா எல்லா தொடரிலும் இடம் பெற மாட்டார் என்பதை தேர்வாளர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர். ஹர்திக் பாண்ட்யாவை தற்போது நாங்கள் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போது சுப்மன் கில், ஒருவேளை ஷ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பினால் அவர் போட்டியாக இருக்கலாம். இக்கட்டான நிலையில் மட்டுமே அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சுப்மன் கில் போன்றோரால் உதவ முடியும். ஆனால், கடைசியாக சூர்யகுமார்தான் கடினமாக முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி நாளை தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14ஆம் தேதி பாகிஸ்தானையும், 18ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

கடைசியாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். இரண்டு முறை டக்அவுட் ஆனார். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 717 ரன்கள் குவித்தார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். அனைத்து போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்தார்.

Tags:    

Similar News