null
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவிப்பு
- சுப்மன் கில் 269 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பவுண்டரிக்கு பறக்க விட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அரை சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டர் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.