கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை.. வெற்றி யாருக்கு?

Published On 2025-02-23 07:15 IST   |   Update On 2025-02-23 07:15:00 IST
  • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி துபாயில் நடைபெறுகிறது.
  • முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை வீழ்த்து அரையிறுதி சுற்றுக்கு நுழையும் முனைப்பில் உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அந்த வகையில், கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2023 உலகக் கோப்பை தொடரில் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது.

இதுதவிர கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வரிசையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

Similar News