2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்- சஞ்சய் மஞ்ரேக்கர்
- பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது.
- ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன்.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை வீணடித்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிட்ச் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அந்த பிட்ச்சில் பும்ராவால் கூட எதையும் செய்ய முடியவில்லை. காற்றிலும் உதவியும் கிடைக்கவில்லை. இதுபோக பும்ரா, ஜடேஜாவுக்கு எதிராக பென் டக்கெட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்.
அவரை சொந்த மண்ணில் நடைபெற்ற 2024 தொடரில் கூட ஜடேஜா அவுட்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை அப்படி உங்களுடைய 2 முன்னணி பவுலர்களுக்கு எதிராக செட்டிலான இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடினால் அவர்களுக்கு வெற்றி உறுதியாகி விடும்.
பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன். ஏனெனில் கடைசி நாளில் பிட்ச்சில் அவருக்கு உதவி செய்ய ரஃப் இருந்தது. அது வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைகள் கிடையாது. அந்த காலடிகளை பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஜடேஜா பயன்படுத்தவில்லை. மிகவும் தாமதமாக பென் டக்கெட்டுக்கு எதிராக பயன்படுத்தினார்.
ஆனால் அவரைப் போன்ற அனுபவமிக்க பவுலர் அதை அதிகம் பயன்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அங்கே தான் ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.
ஒரு காலத்தில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும். அது நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி. குல்தீப் உங்கள் அணியில் இருந்தால், அவரை விளையாட விடுங்கள். இங்கிலாந்தில் விளையாடுவதால் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யாதீர்கள்.
நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை விட்டுவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும்.
என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.