கிரிக்கெட் (Cricket)

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட தென் ஆப்பிரிக்கா- 98 ரன்களில் அபார வெற்றி

Published On 2025-08-19 17:13 IST   |   Update On 2025-08-19 17:13:00 IST
  • ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
  • மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

கெய்ன்ஸ்:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.

இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனை தொடர்ந்து மார்ஷ் மற்றும் பென் த்வார்ஷுயிஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. பென் த்வார்ஷுயிஸ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து மார்ஷ் 88 ரன்னிலும் ஆடம் ஜாம்பா 11 ரன்னிலும் வெளியேறினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News