புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்..!
- எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஆகாஷ் தீப் 10 விக்கெட் வீழ்த்தினார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
வெற்றிபெற்ற சந்தோசத்தில் டி.வி.க்கு பேட்டியளிக்கும்போது, எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த வெற்றியை அரப்பணிக்கிறேன் என எமோசனலாக பேசினார். இதனால் வெற்றியை கொண்டாட வேண்டிய ரசிகர்கள் இவரது பேச்சைச் கேட்டு மிகுந்த கவலை கொண்டனர்.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப்பின் சகோதரி ஜோதி கூறியதாவது:-
எனது சகோதரன் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது, இந்தியாவுக்காக பெருமை படக்கூடிய விசயம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக, விமான நிலையத்தில் நாங்கள் அவனை சந்தித்தோம். அப்போது நான் அவனிடம், நான் முற்றிலும் நலமாக இருக்கிறோன். என்னைப் பற்றி கவலைப்படாதே. நாட்டிற்காக நன்றாக செயல்படு எனத் தெரிவித்தேன்.
என்னுடைய புற்றுநோய் பாதிப்பு 3ஆவது நிலையில் (Third Stage) உள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது பார்ப்போம்.
ஆகாஷ் தீப் விக்கெட்டுகள் வீழ்த்தும்போதெல்லாம், எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்துவானோ, அப்போதெல்லாம் கைத்தட்டி, சத்தமாக மகிழ்ச்சியை கொண்டாடுவோம். எங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்று கேட்பார்கள்.
என்னைப் பற்றி ஆகாஷ் தீப் சொல்வார் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் இது தொடர்பாக வெளியே சொல்ல தயாராக இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் எமோசனலாகி, எனக்காக இந்த வெற்றியை அர்ப்பணித்தது, பெரிய விசயம். இது எங்களுடைய குடும்பம் மற்றும் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது காட்டுகிறது.
இவ்வாறு ஆகாஷ் தீப் சகோதரி ஜோதி தெரிவித்துள்ளார்.