ஆசிய கோப்பையை ரகசிய இடத்தில் வைத்து இருக்கும் மோஷின் நக்வி
- அபுதாபியில் எந்த இடத்தில் அவர் ஆசிய கோப்பையை மறைத்து வைத்துள்ளார் என்று தெரியவில்லை.
- இந்த செயலால் மோஷின் நக்வி மலிவான அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உள்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.
இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். மேலும் பாகிஸ்தான் மந்திரியாக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஆசிய கோப்பையை முறைப்படி ஒப்படைக்க ஒரு தனி விழாவை நடத்த வேண்டும் என்றும், அதில் இந்திய வீரர் யாராவது நேரில் வந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நக்வி பிடிவாதமாக இருந்தார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பையை மோஷின் நக்வி அபுதாபியில் ரகசிய இடத்தில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் கோப்பையை எடுத்து சென்றுள்ளார். அபுதாபியில் எந்த இடத்தில் அவர் ஆசிய கோப்பையை மறைத்து வைத்துள்ளார் என்று தெரியவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) அதிகாரி ஒருவர் துபாயில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றார். அங்கு ஆசிய கோப்பை இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அங்குள்ள ஊழியர் ஆசிய கோப்பை இங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது என்றும், தற்போது அது அபுதாபியில் நக்வியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த செயலால் மோஷின் நக்வி மலிவான அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த மாதம் 28-ந்தேதி ஆசிய கோப்பையை வென்றது. ஆனால் கிட்டதட்ட 1 மாதமாகியும் ஆசிய கோப்பை இன்னும் வழங்கப்படவில்லை.