விளையாட்டு
லக்சயா சென் (கோப்பு படம்)

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து லக்சயா சென் விலகல்

Published On 2022-03-22 03:22 IST   |   Update On 2022-03-22 03:22:00 IST
ஓய்வுக்கு பின்னர் கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் சென் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் அந்நாட்டின் பாசெல் நகரில் இன்று முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் கலந்து கொள்கிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் விலகி உள்ளார்.

ஜெர்மன் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்றதால், உடல் சோர்வு காரணமாக சுவிஸ் ஓபனில் விளையாடவில்லை என இந்திய பேட்மிண்டன் சங்கத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் மீண்டும் பெங்களூரு வந்து 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வெடுத்து, கொரிய ஓபன் தொடரில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News