விளையாட்டு
ரமீஸ் ராஜா, சவுரவ் கங்குலி

4 நாடுகள் போட்டி குறித்து கங்குலியிடம் பேசுவேன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார்

Published On 2022-03-16 12:51 IST   |   Update On 2022-03-16 12:51:00 IST
ஆஸ்திரேலியா தனது விருப்பத்தை தெரிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலியிடம் பேசுவேன் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே 2012-13-க்கு பிறகு நேரடி போட்டிகள் நடத்தப்படவில்லை. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பரிந்துரை செய்திருந்தார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த போட்டிக்கு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.

இதற்கிடையே ரமீஷ் ராஜாவின் பரிந்துரையை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையேயான போட்டியை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக கூறி இருந்தது.

இந்த நிலையில் 4 நாடுகள் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலியிடம் பேசுவேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் கங்குலியிடம் 4 நாடுகள் போட்டி குறித்து நான் பேசுவேன். நாங்கள் இருவரும் முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள்.

இதனால் எங்களுக்கு கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமே ஆகும். அது அரசியல் அல்ல. இந்த போட்டியில் இந்தியா பங்கேற்காதபட்சத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 நாடுகள் போட்டியை ஆண்டுதோறும் பாகிஸ்தானில் நடத்த முயற்சிப்போம்.

இவ்வாறு ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

Similar News