விளையாட்டு
ஐ.பி.எல்.-ஐ போன்று பி.எஸ்.எல். தொடரிலும் ஏலம் முறை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சொல்கிறார்
ஐ.பி.எல். தொடரில் ஏலம் முறை நடைமுறையில் இருப்பதுபோல், பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் ஏலம் முறை கொண்டு வரப்படும் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் லீக்காக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) உள்ளது. ஐ.பி.எல். தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக் பாஷ், கரீபியன் பிரிமீயர் லீக் போன்றவைகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இருந்தாலும், ஐ.பி.எல். தொடருக்கு இணையாக ஜொலிக்க முடியவில்லை. ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு வீரர்களும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒரு தொடரில் விளையாடினாலே கோடீஸ்வரர் என்ற நிலைக்கு வீரர்கள் உயர்ந்து விடுகிறார்கள்.
இதனால் ஐ.பி.எல். தொடர் நடைபெறும்போது சர்வதேச தொடர்களை கூட புறக்கணிக்க வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஏராளமான வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது ஐ.பி.எல் பெரிய தொடரா? பாகிஸ்தான் சூப்பர் லீக் பெரிய தொடரா? என்ற விவாதம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஆனால் ஐ.பி.எல். தொடரில் வீரர்கள் ஏலம் விடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், அடுத்த வருடத்தில் இருந்து ஏலம் முறை அறிமுகப்படுத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறுகையில ‘‘நிதி தொடர்பாக தனியாக செயல்பட புதிய வருவாயை உருவாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக், ஐ.சி.சி. நிதியைத் தவிர எங்களிடம் தற்போது ஏதுமில்லை. அடுத்த வருடத்தில் இருந்து ஏலம் மூலம் வீரர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வர விரும்புகிறேன். அதற்கான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், அணி உரிமையாளர்களுடன் இதுகுறித்து பேச வேண்டியுள்ளது.
இது ஒரு பண விளையாட்டு. பாகிஸ்தானில் கிரிக்கெட் பொருளாதாரம் உயரும்போது, எங்களுடைய மரியாதையும் உயரும். நிதி பொருளாதாரத்தின் முக்கியமான காரணி பாகிஸ்தான் சூப்பர் லீக். நாங்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஏலம் முறையை கொண்டு வந்தால், நிதி அதிகரிக்கும். அதனை ஐ.பி.எல். மீது செலுத்துவோம். அதன்பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறந்தள்ளி யார் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்கள் என்று பார்ப்போம்.’’ என்றார்.
இதையும் படியுங்கள்... பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர்