விளையாட்டு
சதத்தை தவறவிட்டது ஏமாற்றம், ஆனால் வருத்தம் இல்லை- ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
உள்ளூர் போட்டிகளில் இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் இருந்ததால் தன்னால் திட்டமிட்டு நேர்மறையுடன் விளையாட முடிந்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.
பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 59.1 ஓவர்களில் 252 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. பந்துவீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒருவர் மட்டுமே தாக்குப்பிடித்து சிறப்பாக ஆடினார். அவர் 98 பந்துகளில் 92 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், 4 சிக்சரும் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக ரிஷப்பண்ட் 39 ரன் எடுத்தார்.
இந்த நிலையில் சதம் அடிக்காதது தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த ஆடுகளம் முதல் நாளிலேயே 5-வது நாளில் இருப்பது போன்று கடினமான நிலையில் இருந்தது. உள்ளூர் போட்டிகளில் இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் இருந்தது. இதனால் என்னால் திட்டமிட்டு நேர்மறையுடன் விளையாட முடிந்தது.
சதத்தை தவறவிட்டது ஏமாற்றம் அளித்தது. ஆனால் அணி போராடும் வகையில் ஸ்கோரை தொட் டுள்ளது. இதனால் வருத்தம் அடையவில்லை.
உண்மையிலேயே இந்த ஆடுகளத்தில் 50 ரன் எடுப்பது சதத்தை போன்றது. இதனால் தான் நான் அவ்வாறு எனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன்.
இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.