விளையாட்டு
ஸ்ரேயாஸ் அய்யர்

சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர்- இந்தியா 252 ரன்களில் ஆல் அவுட்

Published On 2022-03-12 19:03 IST   |   Update On 2022-03-12 19:03:00 IST
நெருக்கடிக்கு மத்தியிலும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு:

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முக்கிய விக்கெட்டுகளை விரைவில் இழந்ததால் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது.

கேப்டன் ரோகித் சர்மா (15), விராட் கோலி (23), மயங்க் அகர்வால் (4) ஆகியோர் ஏமாற்றம் அளித்த நிலையில், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். விஹாரி 31 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 



நெருக்கடிக்கு மத்தியிலும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் 98 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்து, கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம தலா 3 விக்கெட் எடுத்தனர்.  தனஞ்செய டி சில்வா 2 விக்கெட், சுரங்கா லக்மல் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்குகிறது.

Similar News